Thursday, November 21, 2013

வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க

நீலம் நெய்தல் நிலவி(ம்) மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி(வ்) வளம் மல்கிய சிக்கலுள்
வேலஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.
திருஞானசம்பந்தர்
சிவபெருமான் தன் பேரருளை வாரி வழங்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள கோயில்களுள் பலவகையாலும் மேம்பட்ட சீரும் சிறப்பும் பொலியத் திகழ்வது சிக்கல்.
பெருமைகள் பல பெற்ற எம்பெருமான் ஆட்சி செய்யும் தலம் என்றாலும், அவரே மகிழும் வண்ணம் ஒரு நிகழ்வு இத்தலத்தில் காலம்காலமாக நிகழ்ந்து வருகிறது. அது என்ன என்பதைப் பார்க்கும் முன் தலபுராணம் தெரிந்து கொள்வோம்.
பழங்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்து ஈசனைக் குறித்துத் தவம் செய்து வந்தார். அச்சமயம் காமதேனுப் பசுவும் இங்கு வந்து இறைவனைப் போற்றி வணங்கியது.
இத்தலத்துத் திருக்குளத்தில் காமதேனு நீராடியபோது அதன் பால் பெருகி உண்டான வெண்ணெய் நீர்நிலை முழுவதும் பரவியது.
தவமிருந்த வசிட்டர் குளத்தினுள் பெருகியிருந்த பாலில் மிதந்த வெண்ணெயைக் கண்டார். அதனை ஒன்றாகச் சேர்த்துத் திரட்டி சிவலிங்கமாக அமைத்து, ஆன்மார்த்தமாக சிவ பூசனை செய்தார். பூசனை இனி நிறைவேறியது. லிங்கத்தை வேறிடத்தில் அமைக்க முயன்றார் வசிட்டர். வெண்ணெய் லிங்கப் பிரானோ திருவிளையாடல் புரிய எண் "கல்' என இறுகி அசையாது நின்றார்.
வசிட்ட முனிவர் "செல்வமே சிவபெருமானே, யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன். எங்கெழுந்தருளுவது இனியே' என்று தொழுது லிங்கத் திருமேனயை "சிக்' எனப் பிடித்தார். அன்று முதல் இத்தலத்திற்கு சிக்கல் எனப் பெயர் வழங்கலாயிற்று.
வெண்ணெயால் திருமேனி அமைந்ததால் இறைவன் வெண்ணெய் லிங்கப் பிரான். வடமொழியில் நவநீதேஸ்வரர்.
இத்தலத்தில் முருகப் பெருமான் சிங்கார வேலவராக அமர்ந்து காட்சியளிக்கிறார். முருகனின் திருப்பெயர்களுள் சிகி வாகனன் என்பதும் ஒன்று. இதற்கு மயில் மீது அமர்ந்து விளங்குபவன் என்று பொருள் சிகிவாகனனாக அதாவது மயில்வாகனனாக முருகன் இத்தலத்தில் வீற்றிருப்பதால் சிகி என்பதே மருவி "சிக்கல்' என்றானதாகக் கருதுவோரும் உண்டு.
அம்பிகை வேல்நெடுங்கண்ணி என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் தெற்கு நோக்கி தனிச்சன்னதி கொண்டுள்ளாள். வேல்போன்ற நீண்ட விழிகளை உடையவள் என்ற பொருளுடைய இப்பெயர், வடமொழியில் சத்தியா தாட்சி என வழங்குகிறது.
வெண்ணெய்பிரானும் வேல்நெடுங்கண்ணியும் பெருமைகொள்ளும் வண்ணம் இங்கே ஆண்டு தோறும் நிகழும் ஓர் அற்புத சம்பவம், புராணச் சிறப்பு உள்ளது.
அமரர் காவலன் ஆறுமுகன், அசுரன் சூரபத்மனை அழித்திட ஆங்காரமாகப் புறப்பட்டபோது, அந்த ஓங்கார ரூபனுக்கு ஒப்பற்ற ஆயுதம் ஒன்றினை அளித்திட எண்ணினாள் அன்னை வேல்நெடுங்கண்ணி.
என்ன ஆயுதம் தருவது?
எப்போதும் அன்னையின் பார்வையில் இருக்கும் பிள்ளைக்கு ஆபத்து எதுவும் வராது அல்லவா? அதனால் தன் விழிகளுக்கு ஒப்பான வேல் ஆயுதத்தினை வேலனுக்கு அளித்தாள் வேல்நெடுங்கண்ணி.
அருள்விழியாள் அளித்த வேலை அனல் விழியால் பிறந்த அழகன் வாங்கும் போது அவன் உடலில் பெருகிய வெப்பத்தால் பொங்கியது வியர்வை.
அப்போதே அவனது நெற்றிக்கு அச்சாரம் இடப்பட்டுவிட்டதால் அகமகிழ்வோடு ஆசியளித்தாள் அம்மை.
புராணம் சொல்லும் இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக இன்றும் சிக்கல் திருத்தலத்தில் நிகழ்கிறது அந்த அற்புதம்.
ஆண்டுதோறும் கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள் (சூரசம்ஹாரத்திற்கு முதல்நாள்), சூரனை வதைத்திட சிங்காரவேலவர், வேல்நெடுங்கண்ணியிடம் வேல்பெற்றிட வருவார். அன்னை அளித்திடும் வேலைப் பெற்றதும் பிள்ளை முகத்தில் வியர்வை துளிர்த்திடும். அருகில் இருப்போர் மேலேயெல்லாம் அது பெருகித் தெளித்திடும்.
இத்தலத்து முருகனின் மூலவர் விக்ரகமே உற்சவராகவும் இருப்பது தனிச்சிறப்பு என்றால், அந்த விக்ரகத் திருமேனியில் சிங்காரவேலவன் முழுமையாய் உறைந்திருப்பதை உணர்த்தும் விதமாக வேல்வாங்கும் தருணத்தில் வியர்வை பொங்குவது, கண்டால் மட்டுமே உணரக்கூடிய அதிசயம்.... அற்புதம்!
அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அவ்வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின், ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதலாம் என்பர்.
கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோலவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டுவு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.
இவர் சன்னதியில் கட்டமுது கட்டுவோர் வேண்டிய யாவும் எட்டுவார் என்பது நிச்சயம்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்தூரில் போர் முடித்து என்பார்கள். சூரசம்ஹாரம் செந்திலில் நடந்தாலும் அதற்கான அச்சாரமாக அன்னை வேல்நெடுங்கண்ணி சிங்காரவேலனுக்க வேலாயுதத்தினைத் தருவதும், அதனைப் பெற்றிடும் வேலவன் திருமுகம் வியர்ப்பதும் ஆண்டுதோறும் அடியவர் கண்டு அகம் மகிழும் அற்புதம்.
சூரனை அழித்திடச் சென்ற சுப்ரமண்யன், அவனுக்கு இரங்கி குக்குடமும் மயிலுமாக ஆக்கிக் கொண்டான்.
பகைவனுக்கும் அருளிய அந்தச் சிங்கார வேலவன் பக்தர்களுக்கு அருள மாட்டானா என்ன?
தரிசித்துப் புண்ணியத்தோடு முருகனின் பேரருளையும் பெற்றுவர இந்தக் கந்தசஷ்டியில் நீங்களும் புறப்படுங்கள்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்திலிலே போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை தக்க நலன்களைத் தந்திட வேண்டியே நித்தம் பணிவோம் நினைந்து.

எங்கே இருக்கு: நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. திருவாரூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 - 12, மாலை 4 - 9

இந்த ஆண்டு சிக்கல் திருத்தலத்தில்...
சிங்காரவேலவன் வேல்வாங்கி வியர்வை சிந்தும் நாள் - 07.11.2013
சூரசம்ஹாரம் - 08.11.2013
தெய்வானை திருமணம் - 09.11.2013
வள்ளி திருமணம் - 10.11.2013

No comments:

Post a Comment